நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல்ட் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.2,500, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,850 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து அறுவடை இயந்திர உரிமையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூடுதல்தொகை கேட்டால், வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,880, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,160 என வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை உழுவை இயந்திரங்கள் மற்றும் இதர வேளாண் கருவிகளும் மணிக்கு ரூ.500 வீதம் தேவைக்கேற்ப விவசாயிகள் வீட்டில் அல்லது வயல்களில் இருந்தபடியே உழவன் செயலியில் இ-வாடகை மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.