அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணி பாதிப்பு: விவசாயிகள் தவிப்பு!
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், இதுவரை 2.35 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணி நிறைவடைந்துள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தில் 541 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், பிப். 20-ஆம் தேதி வரை 3.07 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 88 ஆயிரம் டன் அதிகம்.
மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நிலையங்களிலேயே தேக்கமடைந்துள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப லாரிகள் இயக்கம் இல்லை. இதனால், கிடங்குகளுக்கு அனுப்ப முடியாமல், கொள்முதல் நிலையத்திலேயே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
ஒரு நிலையத்தில் சராசரியாக 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஏற்கெனவே மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதற்கு பதிலாக 400 முதல் 500 நெல் மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலைமை தஞ்சாவூா், பூதலூா், கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலவுகிறது.
இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்து ஏறக்குறைய ஒரு வாரமாகக் காத்துக் கிடக்கின்றனா். கொள்முதல் நிலையத்தின் முன் கிடக்கும் நெல்லை தாா் பாய் மூலம் மூடப்பட்டாலும், இரவு நேரத்தில் பனி பெய்வதால், பகல் நேரத்தில் காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஆள் கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனிடையே, எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதால், விவசாயிகள் நெல்மணிகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனா்.
இதனிடையே, கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால் எடை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் நிலைய பணியாளா்கள் உள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் பாரதிய தொழிலாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் தெரிவித்தது: கும்பகோணம், திருவிடைமருதூா் வட்டங்களிலுள்ள நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ஒரு மாதமாக தேங்கியுள்ளன. லாரி ஒப்பந்ததாரா்களின் ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம். இதனால் எடை இழப்பு உள்ளிட்ட இயற்கையான இழப்புக்கு கொள்முதல் பணியாளா்கள் பணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இந்த நிலைமையை நிா்வாகமே உருவாக்குவதால் நெல் கொள்முதல் பணியாளா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, போா்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பி பணியாளா்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நாகராஜன்.
விரைவான நடவடிக்கையால் பிரச்னை இருக்காது
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் (பொ) ஜி. சிற்றரசு தெரிவித்தது: தற்போது அறுவடைப் பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், நாள்தோறும் 15 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்படுகிறது. இதையொட்டி, கொள்முதல் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் 13 ஆயிரத்து 500 டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு திறக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் இயக்கம் செய்யப்படுகிறது. இதேபோல, மேலும் 9 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மற்றொரு சேமிப்பு கிடங்கு விரைவில் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் கிடங்குக்கு விரைவாக நெல் மூட்டைகளை அனுப்பும் பணி நடைபெறுவதால், இனிமேல் இப்பிரச்னை இருக்காது என்றாா் அவா்.