செய்திகள் :

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

post image

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் நனைந்து, முளைத்து வீணாயின. நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் உள்ள காட்டூர் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டார். மேலும், திருவாரூர், நாகையிலும் ஆய்வுசெய்தவர் திமுக அரசு நெல் கொள்முதலில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

ரயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பும் பணி- உதயநிதி ஆய்வு

துணை முதல்வர் ஆய்வு

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்ட அதே காட்டூர் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தாமதமாக வந்த உதயநிதி தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``தஞ்சாவூரில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 4,000 டன் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு நாளைக்கு 2,000 டன் நெல் அனுப்பப்படுகிறது.

தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பல தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லியுள்ளார். அதில், திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குடோனுக்கு எடுத்து செல்லாததால், அங்கே புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில், அக்டோபர் 1-ம் தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், நமது ஆட்சியில் சென்ற ஆண்டில் இருந்து டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, செப். 1-ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

நெல் மூட்டைகள் அனுப்பும் பணியை ஆய்வு செய்த உதயநிதி

பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தவறானது

அதன்படி இந்தாண்டு செப்.1-ம் தேதி முதல் நேற்று வரை அதாவது 50 நாட்களில் 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் டன் நெல் மூட்டைகள் கிடங்கிற்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதம் உள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் அந்த பணிகளும் நிறைவடையும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இன்னும் இரண்டு லட்சம் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவுக்கு இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவான அளவில் கொள்முதல் செய்வதாகவும் பழனிசாமி, உண்மைக்கு புறம்பான ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை

தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில், மொத்தமாகவே 200 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் திறக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 300 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டுள்ளன.. மேலும், ஒரத்தநாடு பகுதிகளில் ஒரு நாளைக்கு 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரத்தநாடு புதுார், திருவையாறு, விளங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக ஒரு லோடுமேன் கூறியதாக, ஒரு தவறான குற்றச்சாட்டையும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

எந்த இடத்திலும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. பழனிசாமி மட்டும் தான் பொய் புகார்களை கூறி வருகிறார். நெல்லை எடுத்து செல்ல போதிய லாரிகள் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 20,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 16,000 நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதே போல் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக ஒரு நாடகத்தை பழனிசாமி நடத்தியுள்ளார். அதில், பெண் ஒருவர் முளைத்து விட்டதாக கூறி இருந்தார். உடனே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஊரான வரவுக்கோட்டைக்கு சென்று, ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அந்த பெண் ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் நடவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவரது வயலில் நேற்று மதியம் வரை அறுவடை நடைபெறவில்லை. அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திக்கு கொண்டு வந்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம். எனவே, பழனிசாமி கூறிய புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. ஆனால் நமது அரசு அந்த அரிசியை வழங்கவில்லை என ஒரு புகாரை பழனிசாமி கூறியுள்ளார். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் இறுதியில், ஒரு வழிகாட்டுதல் குழுவை தமிழகத்திற்கு வழங்கியது. வழிகாட்டுதல் வேறு, ஒப்புதல் வேறு. ஆனால் இன்று வரை அதற்கு மத்திய அரசு அனுமதிக்க வில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

22 சதவீதமாக ஈரப்பத்தை உயர்த்த வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை சரி பார்ப்பதற்காக, மத்திய அரசு மூன்று பேர் கொண்ட ஒரு மூன்று குழுவை நியமித்துள்ளது. எனவே, இதையெல்லாம் மறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த புகார்களை தெரிவித்து வருகின்றார். வேளாண் துறைக்கு என ஒரு தனி பட்ஜெட், நெல்லுக்கான ஊக்கத்தொகையை சரியான நேரத்தில் உயர்த்தி வழங்கியது என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியதால், தமிழகத்தில் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் பங்களிப்பை வேளாண் துறை மட்டும் தந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்த வளர்ச்சி எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். அதை மக்களோ, விவசாயிகளோ நம்ப எந்த நேரத்திலும் தயாராக இல்லை. பொய்யை விதைத்து விவசாயிகளுடைய வாக்குகளை எல்லாம் அறுவடை செய்யலாம் என்கிற பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. ஏன் என்றால், இங்கே நடப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்ற டெல்டாகாரன் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். விவசாயிகளுக்கு நமது அரசு என்றைக்கும் துணை நிறக்கும்” என்றார்.

Bihar: முதல்வர் வேட்பாளர் யார்? பிரசாரம் தொடங்கிய மோடி; NDA-வில் முடியாத சிக்கல்!

தேர்தல்பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் கரூர் விசிட் கேன்சல்?' - பின்னணி என்ன?

'கரூர் திட்டம் ரத்து?'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கரூர் விசிட் ப்ளான் கேன்சல் செய்யப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" - செல்லூர் ராஜு சாடல்!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர்.... மேலும் பார்க்க

SIR: `தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ - தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.... மேலும் பார்க்க

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க