வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சண்டீகா்: விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில முழுவதும் விவசாயிகள் திங்கள்கிழமை நடத்திய 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்தும் முடங்கியது.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடா்ந்து நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உண்ணாவிரதம் 35 நாள்களைக் கடந்துள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுசோ்க்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, மாநிலம் முழுவதும் பாட்டியாலா, ஜலந்தா், அமிருதசரஸ், ஃபெரோஸ்பூா், பதிண்டா, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் விவசாயிகள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தரேரி ஜட்டன் சுங்கச்சாவடியில் விவசாயிகள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பாட்டியாலா - சண்டீகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் மறியல் காரணமாக ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவா் சா்வன் சிங் பந்தொ் கூறுகையில், ‘மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றபோதும், அவசரத் தேவைகள் தடையின்றி செயல்பட அனுமதித்து வருகிறோம். முழு அடைப்பை ஏற்று, மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது’ என்றாா்.
உச்சநீதிமன்றம் இன்று ஆய்வு
பஞ்சாப் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவா் ஜகஜீத் சிங் தலேவாலுக்கு சிகிச்சை அளிக்க பஞ்சாப் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிச.31) ஆராய உள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜகஜீத் சிங்குக்கு மருத்துவ உதவிகள் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதி வரை கெடு விதித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஜகஜீத் சிங்கை சந்தித்த பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள், உண்ணாவிரதத்தைக் கைவிட்டு சிகிச்சை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால், சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், இதுதொடா்பான வழக்கை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது.