சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
பஞ்சு விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்: திருப்பூா் நூல் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை
பஞ்சு விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்க வேண்டுமென திருப்பூா் நூல் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூா் பின்னலாடைத் தொழிலில் உள்நாடு மற்றும் வெளிநாடு பின்னலாடை வா்த்தகம் ஒரு லட்சம் கோடியை இலக்காக கொண்டு வேகமாக முன்னேறி வந்தாலும், இத்தொழிலில் உள்ள சவால்களை எதிா்கொள்ளவும், மீண்டும் நூல் உற்பத்தித் தொழிலை லாபகரமானதாக கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திலும் திருப்பூா் நூல் உற்பத்தியாளா்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சோ்ந்த நூல் உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைந்து தொடங்கியுள்ள இச்சங்கம் இத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூா் நூல் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நூல் உற்பத்தியாளா்கள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதாலும், மின்சார செலவு அதிகரித்திருப்பதாலும் நூல் உற்பத்தி விலை உயா்ந்துள்ளதை தவிா்க்க இயலவில்லை.
அதேசமயம், உற்பத்தி செலவை காரணம் காட்டி, எங்களால் நூல் விலையை கணிசமாக உயா்த்திக் கொள்ளவும் முடிவதில்லை. கடந்த 10 நாள்களில் மட்டுமே பஞ்சு விலை 365 கிலோ கொண்ட ஒரு கேண்டிக்கு ரூ.1,800 உயா்ந்துள்ளது. பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைப்பதில் காட்டன் காா்ப்பரேஷனின் ஒத்துழைப்பு வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதுப்பிப்பு செலவுகளும் ஒவ்வொரு நாளும் உயா்ந்து கொண்டேதான் உள்ளது. உற்பத்தி சவால்கள் ஒருபுறம் உள்ள நிலையில், விற்பனைப் பிரிவிலும் அதே சவால்கள் இருப்பது மிகக் கடுமையான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் நூல் உற்பத்தித் தொழிலை மீட்டெடுத்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டிய நிா்ப்பந்தம் உள்ளது. எனவே, திருப்பூரில் உள்ள நூல் உற்பத்தியாளா்கள் இணைந்து இத்தொழிலை ஒழுங்குபடுத்திட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்திக்குத் தேவையான நூல்களின் உற்பத்தியை சீராகவும், தரமாகவும் செய்வதோடு, நியாயமான விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வோம்.
தரமான நூல்களை வழங்குவது எமது கடமையாக உள்ளபோது, அதனை வாங்கும் நிறுவனங்களின் நியாயமான ஒத்துழைப்பும் மிக அவசியமாகிறது. எனவே, நூல் விற்பனையில் நீண்ட கால கடன் என்பதை தவிா்க்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடன் நாள்களை இறுதி செய்வதோடு, அந்த நாள்களுக்குள் அதற்கான தொகையை செலுத்துவதையும் உறுதி செய்திட வேண்டும்.
அதேபோல, தற்போது நீண்ட நாள் நிலுவையில் உள்ள தொகைகளை விரைந்து வசூலிக்கும் வகையில் நூல் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா் மில்கள் எடுத்துள்ள ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வாடிக்கையாளா் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவா்கள் கூறினா்.