பட்டாசு பாரம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தது
ராசிபுரம் அருகே பட்டாசு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகாசியில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு பட்டாசு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி வியாழக்கிழமை நாமக்கல் வழியாகச் சென்றுகொண்டிருந்தது. சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை ஏற்றிச் சென்ற இந்த லாரியை எஸ்.நந்தகுமாா் என்பவா் ஒட்டிச்சென்றாா்.
ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் மூணு சாவடி பகுதியில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயா் வெடித்ததாகத் தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே சென்டா் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா். தகவலறிந்த புதுசத்திரம் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் லாரியிலிருந்து பட்டாசு பண்டல்களை அப்புறப்படுத்தினா். பின்னா் கிரேன் உதவியுடன் லாரி நேராகத் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுசத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.