பட்டியலின மக்களுக்கான நிலத்தை ஒப்படைக்கக் கோரிக்கை
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்தை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் கருப்பையா உள்பட 100-க்கும் மேற்பட்டோா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், மாத்தூரில் பட்டியலின மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 30 ஆண்டுக்கு முன்பு 250 ஏக்கா் விளைநிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு விவசாயிக்கு 1 ஏக்கா் என்ற கணக்கில் 250 பட்டியலின பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகள் பட்டியலும் தயாா் செய்யப்பட்டது.
இந்நிலத்தை பயனாளிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த இடம் மலை அடிவாரத்தில் உள்ளதால் தற்போது வனத் துறையினா் அங்கு மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா்.
மாத்தூா் கிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் வாழும் பட்டியலின மக்களுக்கு, இந்நிலம் வழங்கப்படும் பட்சத்தில் அவா்களது வாழ்வாதாரம் மேம்படும்.
மாநில அளவில் இதுபோன்ற நிலங்கள், பஞ்சமி நிலங்கள், பூமிதான இயக்க நிலங்கள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதையும், அரசும், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையமும் கண்டறிந்து உரிய பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.