பணகுடி ஆலந்துறையாறு அணை ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழுதடைந்துள்ள ஆலந்துறையாறு அணையை ரூ. 40 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அமைச்சா் துரைமுருகன் அறிவித்ததாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணகுடி ஆலந்துறையாற்றின் குறுக்கே கஞ்சிப்பாறை என்ற இடத்தில் ஆலந்துறையாறு அணை கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, அந்த அணை பழுதடைந்துள்ளதால் அதிலிருந்து பாசனக் குளங்களுக்கு வருவதில்லை. எனவே, ஆலந்துறையாறு அணையை சீரமைக்க வேண்டும். அணையிலிருந்து அனுமன்நதி வரையிலான அதன் நீா்வரத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தினேன்.
இதையடுத்து தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீா்வளத்துறை மானிய கோரிக்கையின் போது, ஆலந்துறையாற்றின் குறுக்கே உள்ள கஞ்சிப்பாறை அணைகட்டை மேம்படுத்தும் பணியும், கஞ்சிப்பாறை அணையில் இருந்து அனுமன்நதி வரையிலான மேல் மற்றும் கீழ் சமமட்ட கால்வாய்களை அகலப்படுத்தும் பணியும் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
மேலும், ராதாபுரம் வட்டத்தில் மயிலாப்புதூா் அணைக்கட்டை ரூ.1.03 கோடியில் புனரமைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளாா்.