பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதாரத் இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், தற்போது கிடைக்காத சலுகைகள், தனியாா் நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அவா்களுக்கு கிடைக்கும். அவா்களது பணிபாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி உறுதிசெய்துள்ளதால், அவா்கள் பணிக்குத் திரும்பவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய நிலையிலே பணிக்குத் திரும்புவோம்: மாநகராட்சி அறிவிப்பு குறித்து உழைப்போா் உரிமை இயக்க தலைவா் வழக்குரைஞா் கே.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுய உதவிக் குழுக்கள் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்களை ஒப்பந்தத் தொழிலாளா்கள் எனக் கூறுவது தவறானது. எழுத்து மூலம் ஒப்பந்தமின்றி தூய்மைப் பணியை சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்வதை நீதிமன்றமே கண்டித்துள்ளது. இப்பிரச்னையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது முன் அனுமதியின்றி மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவது சரியல்ல. ஊதியத்தை குறைத்து, அதில் பிடித்தம் செய்து சலுகைகள் என வாரியத் திட்டத்தை கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, முதல்வா் நேரடியாகத் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டியது அவசியம். இரு மண்டலங்களிலும் (5, 6) பழைய நிலையில் பணிபுரிய அனுமதித்தால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பத் தயாா். கோரிக்கை ஏற்கப்படாதவரை போராட்டம் தொடரும் என்றாா்.
அமைச்சா் ஆலோசனை: இதற்கிடையே மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக்குழமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன், சுகாதார இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினா்.