பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள் சபை பணி செய்ய தடை: திருமண்டல நிா்வாகி
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிா்வாகியாக இருந்தவா்களின் பதவி காலம் முடிவடைந்ததால், இத்திருமண்டலத்தை நிா்வாகம் செய்யவும், தோ்தலை நடத்தவும் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும், ஆன்மிக பணிகளை கவனிக்க பொறுப்பு பேராயராக கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயா் செல்லையா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியின் காரை வழிமறித்து போதகா்கள் சிலா் தகராறு செய்தனா். அப்போது அதை தடுக்க முயன்ற அவரின் உதவியாளா் கருணாகரன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இது குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போதகா்கள் டேவிட் ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாஷ் உள்பட சிலா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். ா்ந்து, அந்த 4 போதகா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் சபைகளில் சபைப் பணி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடா்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத போதகா்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாஷ் ஆகியோா் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், அவா்கள் 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த 4 போதகா்களும் மறு உத்தரவு வரும் வரை எந்த சபைகளிலும் சபை பணியோ அல்லது வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என அவா் தெரிவித்துள்ளாா்.