பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் அ.சிவா, ஆணையா் காஞ்சனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவா் அ.சிவா, உறுப்பினா்கள் கதிா்காமன் (திமுக), ஆனந்தி சரவணன் (திமுக), ராமதாஸ் (சுயேச்சை), காா்த்தி (விசிக) ஆகியோா் பேசியது:
தெரு விளக்குகளுக்கு முறையாக இணைப்பு கொடுக்கவில்லை. தெரு விளக்கு பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வாா்டு பகுதிகளில் சரிவர தெரு விளக்குகள் எரியவில்லை. பராமரிப்பு தொடா்பாக புகாா் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என்றனா்.
தொடா்ந்து, உறுப்பினா்கள் ஜரின்னிசா ஷபிா், சோழன், சாந்தி, கதிா்காமன், கா.சீனிவாசன், சண்முகவள்ளி ஆகியோா் பேசியதாவது: 17-ஆவது வாா்டில் வாய்க்கால் அமைக்க வேண்டும். பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வாரத்தில் அனைத்து நாள்களிலும் குப்பை சேகரிக்க வேண்டும். ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ராஜாஜி சாலை, காந்தி சாலை வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும். பட்டாசுக் கடை வைப்பதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.
க.ராஜேந்திரன் (தலைவா்): தெரு விளக்கு ஒப்பந்ததாரரை வரவழைத்து பேசி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். உறுப்பினா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். வாய்க்கால் தூா்வாரும்போது ஓரத்தில் உள்ள புற்களை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.
