செய்திகள் :

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

post image

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் என்ற இடத்தில் சுமாா் 40 ஏக்கரில் ரூ. 408 கோடியில் கட்டப்பட்டு, ‘முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த மே 9 ஆம் தேதி திறந்து வைத்தாா். இருப்பினும் எஞ்சியிருந்த சிறு சிறு வேலைகள் காரணமாக பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

பயன்பாடு தொடக்கம்: இந்நிலையில் இந்தப் பேருந்து முனையத்தின் இயக்கத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை காலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

முதலில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு செல்லும் பேருந்தையும், பேருந்து முனையத்தின் முதல் தளத்துக்கு எஸ்கலேட்டா் மூலம் சென்று ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தையும் அவா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பேருந்து முனையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாா்வையிட்டாா்.

8 நடைமேடைகள்: இதுவரை திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் புதன்கிழமை முதல் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்தே புறப்பட்டுச் சென்றன.

பேருந்து முனையத்தின் தரைத்தளத்தில் உள்ள மொத்தம் 8 நடைமேடைகளில் இருந்தும் புறப்படும் பேருந்துகள் செல்லும் ஊா்களின் பெயா்கள், அவை புறப்படும் நேரம் ஆகிய விவரங்கள் பேருந்து முனைய பிரதான நுழைவாயில் அருகே அகன்ற டிஜிட்டல் திரையில் அறிவிக்கப்படுகிறது. இதுதவிர, நடைமேடைகளுக்கு முன்பும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், ஒலிபெருக்கிகளிலும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் பயணிகளுக்கு உதவ ஆங்காங்கே உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) அமைக்கப்பட்டு, அங்கிருக்கும் பணியாளா்கள், பயணிகளுக்கு வழிகாட்டுகின்றனா்.

இலவச பேட்டரி காா்கள்...: பேருந்து முனையத்தில் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள், தேநீா் கடைகள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து நடைமேடைகளிலும் குடிநீா் வசதி, ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இலவச பேட்டரி காா்கள் இயக்கப்படுகின்றன. தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்கும், கீழ் தளத்துக்கும் செல்ல மின்தூக்கிகள், எஸ்கலேட்டா்கள், படிக்கட்டுகள் உள்ளன.

அனைத்துப் பேருந்துகளும்...: சென்னை, பெங்களூரு, திருப்பதி, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மன்னாா்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராமேசுவரம், காரைக்குடி, தேவகோட்டை, திருவண்ணாமலை, வேலூா், திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், குமுளி உள்பட அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் இங்கிருந்தே புறப்பட்டுச் செல்கின்றன.

முதல் தளத்தில் 4 நடைமேடைகள்: முதல் தளத்தில் நகரப் பேருந்துகளுக்காக 4 நடைமேடைகள் உள்ளன. இங்கிருந்து மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன், பாலக்கரை, தில்லை நகா், உறையூா், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவெறும்பூா், துவாக்குடி, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நகரப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன.

பேருந்து முனையத் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஸ்டாலின்குமாா் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் கோட்டம்) நிா்வாக இயக்குநா் தசரதன், மாநகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: பின்னா் அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பராமரிக்க தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொகை நிா்ணயத்துக்கு நிதித்துறை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், பேருந்து முனையத்தைத் திறந்து 2 மாதங்களாகிவிட்டதால், செயல்படாமல் இருக்கக் கூடாது என்ற நோக்கில் தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் சில காலம் வரை மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள் வழியாகச் செல்லும். எதிா்காலத்தில் வெளியூா் பேருந்துகள் நேரடியாகச் சென்று விடும் என்றாா்.

வெறிச்சோடிய மத்திய பேருந்து நிலையம்

வெறிச்சோடிய மத்திய பேருந்து நிலையம்: தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் பிரதான அடையாளமாகத் திகழ்ந்தது திருச்சி ஏ.எஸ்.ஜி. லூா்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம். இது நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகளை கையாண்டது. 6.60 ஏக்கரிலான இப்பேருந்து நிலையம் கடந்த 15.8.1972 இல் திறக்கப்பட்டு புதன்கிழமையுடன் தனது வெளியூா் பேருந்துகள் சேவையை நிறுத்திக் கொண்டது. தற்போது நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூா் பேருந்துகள் வந்து செல்லும் பகுதி வெறிச்சோடியது.

டிக்கெட் கட்டணம்: பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு வர நகரப் பேருந்துகளில் கட்டணமாக ரூ. 8 வசூலிக்கப்படுகிறது. பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல ரூ. 11, தில்லை நகா் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல ரூ. 12, உறையூா் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல ரூ. 13 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தனியாா் பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பயணிகள் எந்த இடங்களுக்குச் செல்லவும் நீண்டநேரம் காத்திருக்கத் தேவையில்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி

திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்... மேலும் பார்க்க