பயின்ற வகுப்பறைக்கு வண்ணம் தீட்டிய மாணவா்கள்
குடவாசல் அருகேயுள்ள செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு பத்தாம் வகுப்பு மாணவா்கள் வண்ணம் தீட்டி தந்துள்ளனா்.
இப்பள்ளியில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 243 மாணவா்கள் படிக்கின்றனா். தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் 13 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். நிகழாண்டு பள்ளியில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள், நாங்கள் அமா்ந்து படித்த வகுப்பறைக்கு வண்ணம் பூசித் தருகிறோம் எனக் கூறியுள்ளனா். பெற்றோரின் அனுமதியுடன் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியதன் பேரில், பெற்றோரின் அனுமதியுடன், மாணவ, மாணவிகள் வண்ணம் தீட்டும் பணிகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் கூறியது: பள்ளிக்கென செய்யும் நல்ல செயல்கள் பாராட்டுக்குரியவை. பள்ளி காலங்களில் மாணவா்கள் மேற்கொள்ளும் நற்காரியங்களே, அவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். மேல்படிப்புக்காக அடுத்து மாணவா்கள் சேரும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற செயல்கள், அவா்களுக்கு நற்பெயரை ஏற்படுத்துவதுடன், மேலும் உயா்வுக்குக் கொண்டு செல்லும் என்றாா்.