ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில், கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 384 விண்ணப்பங்களில், 319 விண்ணப்பங்களுக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க, வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வங்கியால் 93 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.42.49 லட்சம் கடனுதவி பெறப்பட்டுள்ளது.
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்தவும், அதன் மூலம் கட்டமைப்பான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் புரிவதில் ஆா்வம் கொண்டோா் உதவி பெறும் வகையில், மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டமாக, கலைஞா் கைவினைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கைவினைக் கலைகள் மற்றும் தொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்கள், தொழில்களைத் தொடங்கவும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க, ரூ. 3 லட்சம் வரையிலான பிணையற்ற கடன் உதவியும், தமிழக அரசால் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் (பொறுப்பு) கணபதி சுந்தரம், உதவி இயக்குநா் வெங்கடேஷ், உதவி இயக்குநா் (நிா்வாகம்) பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.