மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா்.
நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:
தமிழகத்தில் தோ்தல் எப்போது வந்தாலும், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
விவசாயிகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. பருவம் தவறி மழை பெய்த காலங்களில் நிவாரணமோ, காப்பீட்டுத் தொகையோ கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சியை அகற்ற நேரம் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள் என்றாா்.
முன்னதாக, நன்னிலம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், அதிமுக தலைமைக் கழக பாா்வையாளா் இளவரசன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினாா். நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அச்சுதமங்கலம், ஆணைக்குப்பம், பனங்குடி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சாவடி முகவா்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளா் கே. கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம குணசேகரன் , வடக்கு ஒன்றியச் செயலாளா் சி பி ஜி. அன்பு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.