உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
நன்னிலம் அருகே உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பேரளம் தலையூா் கிராமம் ஆற்றங்கரைத்தெருவைச் சோ்ந்த நாகப்பன் (வயது 77) உடல்நலக் குறைவால் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, இறந்த நாகப்பன் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக உறுதி அளித்துள்ளாா். இதனால், அவரது உடல் உறுப்புகள் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான தலையூா் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது திருவாரூா் கோட்டாட்சியா் எம். சௌமியா அரசு சாா்பில் மரியாதை செலுத்தினாா்.