பரங்கிமலையில் கல்லூரி மாணவி கொலை வழக்கு! அடுத்தடுத்து நேரிட்ட திருப்பங்கள்!!
ஏற்கனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையால் ரயில் நிலையங்களில் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியிருப்பதாக மக்கள் குமுறிக்கொண்டிருந்த நிலையில் பரங்கிமலை சம்பவம் அதனை மேலும் அதிகமாக்கியிருந்தது.
கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்த மாணவி, ரயில் முன் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்படுவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா? ஆம் 2022ஆம் ஆண்டு அதுபோலத்தான் நடந்தது பரங்கிமலை ரயில் நிலையத்தில்.
கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவி சத்யபிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதல் பிரச்னையால் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டன விவரத்தை வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்யபிரியா - சதீஷ் என்ன தொடர்பு?
பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிா்ப்பால் சதீஷுடன் பழகுவதை, பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகவும் இதனால் சதீஷ் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யபிரியாவிடம் அங்கு நின்றிருந்த சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதம் முற்றியதில் சத்யபிரியாவை அங்கு நின்றிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்வதற்கு முன்பே, தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் தள்ளிவிடுகிறார். இதில் சத்யபிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கொலை செய்துவிட்டு பரபரப்பான ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சதீஷை காவல்துறையினர் கைது செய்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
சத்யபிரியாவின் தந்தை மாணிக்கம் (47), தாய் ராமலட்சுமி (43). இவர்களுக்கு மூன்று மகள்கள். ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கொலை செய்யப்பட்ட சத்யா (20), தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.
அதேப் பகுதியில் வாழ்ந்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ். இவர்தான் கொலையாளி. இந்த சம்பவத்தால், காவலர்களில் ஒருவரின் மகள் பலியாகிறார், மற்றொருவரின் மகன் குற்றவாளியாகிறார்.
ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள் கொலையான மாணவி சத்யபிரியாவின் தந்தை மாணிக்கம் மரணமடைகிறார். முதலில் மகளின் மரணச் செய்தி கேட்டு அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. பிறகுதான் அவர் மதுவில் விஷம் கலந்துக் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க.. பரங்கிமலை: மாணவியை ரயில்முன் தள்ளி கொலை செய்தவருக்கு மரண தண்டனை!
சதீஷின் வாக்குமூலம்
சதீஷ், சத்யபிரியாவை கொலை செய்யும் எண்ணத்துடனே, அவர் கல்லூரிக்கு செல்ல ரயில்நிலையம் வருவதற்கு முன்பு, பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்ததாகவும், வழக்கம் போல சத்யா வந்தபோது சதீஷ் பேசியதாகவும், ஆனால் அவர் மதிக்காத வகையில் பேசியதால் ஆத்திரம் அடைந்து, எனக்குக் கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்துகொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என சதீஷ் வாக்குமூலம் கொடுத்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
தாயும் மறைந்தார்!
மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதித்து உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் இந்த சம்பவமே நடந்தது. ஒருபக்கம் புற்றுநோயுடன் போராட்டம், மறுபக்கம், மகளையும் கணவரையும் ஒரே நாளில் இழந்த துயரத்துடன் போராடி வந்த ராமலட்சுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மரணமடைந்தார்.
சதீஷின் கொலை வெறியால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகியிருக்கிறது. சத்யாவுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்கள் பெற்றோரையும் உடன் பிறந்த சகோதரியையும் இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர்.
விசாரணையும் தீர்ப்பும்
பரங்கிமலை கொலை வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்குரைஞா் வலியுறுத்தியிருந்தார். கடந்த 24-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இளைஞர் சதீஷ் குற்றவாளி என்று டிச.27-ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அதாவது, நீதிபதி ஸ்ரீதேவி பிறப்பித்த தீர்ப்பில், ‘கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
சதீஷுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதாவது, சத்யபிரியாவை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவேறிய பிறகு, கொலை வழக்கில் மரண தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.