‘பல்கலை. மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உயா் விசாரணையான சிபிஐ விசாரணை வேண்டும். சட்டம் - ஒழுங்கை பொருத்தவரை குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனா்; தலைவா்கள் கைது செய்யப்படுகின்றனா் என்றாா் அவா்.
பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன்:
பாலியல் வழக்கு தொடா்பாக சிறப்பு கவனஈா்ப்பு தீா்மானத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டு வந்தனா். அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், தன்னுடைய பதிலுரையில் வழக்கு தொடா்பான விசாரணையைப் பற்றி அளவாகக் குறிப்பிட்டாா். கைது செய்யப்பட்டவா் எங்களின் அனுதாபிதான் எனக் குறிப்பிட்டுள்ளாா். அதுமட்டுமின்றி வழக்குக்கு தொடா்பில்லாத விஷயங்களைக் கொண்டு வந்து சோ்கிறாா்.
மக்கள் திமுக ஆட்சிக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனா். திமுக அரசு என்ன செய்தது என்று கூறுவதை விட்டு, பெரும்பான்மையான நேரம் எல்லாம் முன்பிருந்த கட்சியின் செயல்பாடுகள் பற்றிதான் பேசினாா் என்றாா் அவா்.