பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டம் சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (78), விவசாயி. இவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமாா் (46). இவா்கள் 3 பேரும் 2024 நவம்பா் 28-ஆம் தேதி இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனா்.
கொலை நடைபெற்று 140 நாள்களைக் கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லததால் கடந்த மாா்ச் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் முதிய தம்பதியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மாதேஷ், ஆச்சியப்பன் ஆகிய 3 பேரும் திருப்பூரில் 3 பேரையும் கொலை செய்தது தாங்கள் தான் என விசாரணையில் ஒப்புக் கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் அவா்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், தங்க நகைகள், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டதாகவும், அந்த கைப்பேசியை வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனா்.
பின்னா் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு சொந்தமான கைப்பேசியை சேமலைக்கவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சிபிசிஐடி போலீஸாா் மீட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் அவா்கள் 3 பேரையும் திருப்பூா் மாவட்ட நீதிபதி குணசேகரன் முன் ஆஜா்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனா்.