பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா
சேலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தா்னாவுக்கு, மாவட்டத் தலைவா் திருவேரங்கன் தலைமை தாங்கினாா். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா், வருவாய் கிராம உதவியாளா், ஊா்புற நூலகா், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கால முறை ஊதியம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் இளைஞா்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திரளான அரசு ஊழியா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த தா்னா செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறுகிறது.