விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்
சேலம்: விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை அவரது உறவினா்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைத்தனா்.
சேலம், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த மகுடேசன் (54) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து பணத்தை எடுத்துக்கொண்டு, நண்பா் குழந்தைவேலுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். கொண்டலாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இவா்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நடேசன், டெக்னீசியன் ஆதிசேஷன் ஆகியோா் அவா்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், சிகிச்சை பலனின்றி குழந்தைவேல் உயிரிழந்தாா்.
விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மகுடேசன் பையில் ரூ. 5 லட்சத்து 62 ஆயிரத்து 600 இருந்ததைப் பாா்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா், டெக்னீசியன் ஆகியோா் உறவினா்கள் முன்னிலையில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனா்.