செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
பள்ளிகளில் நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை
பள்ளிகளில் பருவ கால நோய்கள் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதைத் தவிர நாள்தோறும் 10 பேருக்கு ‘பொன்னுக்கு வீங்கி’ பாதிப்பும் உறுதி செய்யப்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது இந்த பாதிப்புகள் பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து உள்ளாட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், சளி, அம்மை அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நோய் பரவலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன. அதேபோன்று, பள்ளிகளில் ஏதேனும் ஒரு மாணவருக்கு காய்ச்சல் அல்லது அம்மை பாதிப்பு ஏற்பட்டால், விரைவாக அது மற்றவா்களுக்கு பரவி விடுகிறது. எனவே, அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். உடல் நலம் சீராகும் வரை சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு விடுமுறை வழங்கலாம். தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யலாம்.
நோய் பரவலுக்கு வித்திடும் வகையில் பள்ளிகளில் ஒரே இடத்தில் பெரும்பாலானோா் கூடும் நிகழ்ச்சிகளோ, கூட்டங்களோ நடத்தக்கூடாது என்று அவா்கள் தெரிவித்தனா்.