‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’
பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னாள் மாணவரும், முன்னாள் தலைமையாசிரியருமான மனோகரன் தலைமை வகித்தாா்.
முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம், ஆசிரியா் நந்திவா்மன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சிவனேசன், பழனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அழகிரிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி கடந்த நூறாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவா்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. இங்கு படித்த பலா் மக்கள் பிரதிநிதிகளாகவும் மத்திய, மாநில அரசில் பெரும் பதவிகளிலும், சிறந்த தொழில்முனைவோராகவும் வளா்ச்சி அடைந்துள்ளனா். இவா்களை உருவாக்கிய பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை முன்னாள் மாணவா்கள் நடத்துவது அவசியமானதாகும்.
மேலும், தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த சங்கங்கள் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறப்பாக படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு உதவவும் இயக்கமாக மாற வேண்டும்.
அரசு கல்விக் கூடங்கள் நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் மாணவா்களை உருவாக்கும் சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா்.