செய்திகள் :

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' - அரசை சாடும் சீமான்

post image

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 14.7 ஏக்கர் நிலப்பரப்பில் (அளவை எண்கள். 453, 495, 496, 497, 498) பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் (Brigade Morgan Heights) என்ற பெயரில் 1,250 ஆடம்பர குடியிருப்புகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்ற துறைகள் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது.

சீமான்
சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2022 ஏப்ரலில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017இன் படி, எந்தவொரு நிரந்தரக் கட்டுமானமும் உறுதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை விதியைத் தமிழக அரசு அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் புறக்கணித்துள்ளனர். இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பித்த நிறுவனம், தங்கள் நிலம் சதுப்பு நிலத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால், அந்த நிலம் சதுப்பு நிலத்தின் உள்ளேயே இருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவை, பொதுமக்களின் பார்வைக்கு இருக்கக்கூடிய வரைபடங்களைக் கூடப் புறக்கணித்து, இந்த நிலம் ராம்சார் தளத்தின் "அருகில்" இருப்பதாகக் கூறி அனுமதி வழங்கியிருப்பது அதிகாரிகளின் கூட்டு சதியைத் தெளிவாக உணர்த்துகிறது.

ஒருபுறம், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போடுகிறார்கள். மறுபுறம், குடிமைப் பணி (IAS) அதிகாரிகளோ சட்டத்தை மீறி அனுமதி கொடுக்கிறார்கள். இதன் பின்னணியில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் கையூட்டு கைமாறியது?

சீமான்
சீமான்

இது வெறும் நிர்வாக சீர்கேடா அல்லது திமுக அமைச்சர்களின் நேரடித் தலையீடா? இத்தனைக் கேள்விகள் எழுப்பப்பட்டப் பிறகும் முதலமைச்சர் அமைதிக்காப்பது பேரவலம். பிரிகேட் மார்கன் திட்டத்தின் அளவை எண்கள் 453, 495, 496, 496, 498 ஆகியவை ராம்சார் தளத்திற்கு உள்ளே வருகிறது என்று தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத் தெரியும்.

சட்டப்படி ராம்சார் நிலத்திற்குள் எந்த  கட்டுமானத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான சுற்றுச்சூழல் துறை, பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதியும், அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் கட்டுமான அனுமதியும் கொடுத்துள்ளது.

மேலும் அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை, இந்த ராம்சார் தளத்தைப் பாதுகாக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. ராம்சார் தளத்தை அறிவித்துவிட்டு மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் ஒன்றிய பாஜக அரசின் சுற்றுச்சூழல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.

"சதுப்பு நிலங்களைக் காப்போம்" என்று ஒருபுறம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்; ஆனால், அதே வேளையில், அவரது ஆட்சியின் கீழ் இயங்கும் துறைகளோ 2,000 கோடி ரூபாய் மதிப்பிலானக் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதியளித்து, ராம்சார் தளத்தை அழிப்பதற்குப் பாதை வகுக்கின்றன.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

சென்னையின் நுரையீரல் என்றும், வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் பாதுகாப்பு அரண் என்றும் போற்றப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, வெறும் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காகப் பலி கொடுக்க இந்த அரசு துணிந்திருப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கே இழைக்கப்பட்டிருக்கும் துரோகம் ஆகும்.

பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதியை உடனடியாகத் திரும்பபெற்று, அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும்.

அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஈடுபாடு குறித்தும் எந்த பாகுபாடுமின்றி ஆய்வுசெய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இந்த சட்டவிரோத அனுமதிகளுக்குக் காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பாஜக - திமுக அரசுகளை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமா... மேலும் பார்க்க

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவ... மேலும் பார்க்க

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபர... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க