5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!
பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை!
பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க அரசு உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் செயல்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ரெங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அங்குள்ள குளிரூட்டும் பெட்டிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், பயன்படுத்தப்படும் தண்ணீா், ரசாயனப் பொடிகள் ஆகியவை குறித்து சோதனை நடைபெற்றது. வேலை செய்யும் தொழிலாளா்களின் உடல்தகுதி சான்று குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான ரசாயனப் பொடிகளில் செயற்கை வண்ணம் மிகுதியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டுமென எச்சரித்தனா்.
மேலும், தொழிலாளா்கள் உரிய பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டுமெனவும், மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ள ஆரோக்கியமானவா்களையே பயன்படுத்த வேண்டுமெனவும், தயாரிப்புக் கூடம் சுகாதாரமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினா்.
குழந்தைகள் அதிகம் விரும்பும் குச்சி ஐஸில் பயன்படுத்தப்படும் குச்சிகள் சுத்தமாக இருக்கவேண்டும், சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து மூலப் பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினாா்.