மதுரையில் கூடிய தொண்டர்கள்: தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு!
தவெக தலைவர் விஜய் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்வதற்காக கடந்த மே 1 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார்.
அன்று மாலைதான் விஜய், விமான நிலையம் வந்த நிலையில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். படப்பிடிப்புக்குச் செல்வதால் கட்சி சார்பில் யாரும் வரவேண்டாம் என்றும் விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையம் வந்தபின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய், 'நான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன், எல்லோரும் வீட்டுக்குச் செல்லுங்கள்' என்றும் கூறியிருந்தார்.
அன்று தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, விமான நிலையத்திற்குள்ளும் பயணிகள் செல்ல சிரமம் இருந்தது. விமான நிலையத்தில் தடுப்புக் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடியதற்கு மதுரை மாவட்டச் செயலாளர்கள் தங்கபாண்டி மற்றும் கல்லணை ஆகியோர் மீது பயணிகளுக்கு தொந்தரவு செய்தல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், சட்ட விரோதமாக கூடியது என 3 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் படப்பிடிப்பு முடிந்து இன்று மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் தொண்டர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தாலியை கழற்றிவிட்டு நீட் தேர்வு எழுதச் சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்: அமைச்சர்