நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்
அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத்
அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் புதிய முதலீகள் கொண்டு வரவும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் மதிப்பாய்வுக் கூட்டம், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
”பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெறச் செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசுக் கட்டடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும், அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.
பசு பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பாளர்களை பணியமர்த்தி சரியான நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குதல், பசுத் தீவனம், தேவையான அளவு தண்ணீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கால்நடைகள் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ஆதரவற்ற பசு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பசுக்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 7,693 பசு மையங்களில் 11.49 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை 21,884 பேருக்கு பசு பராமரிப்பு பயிற்சி வழங்கப்பட்டு மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாள்தோறும் 3.97 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
2025-26 நிதியாண்டில், 4,922 கூட்டுறவு பால் சங்கங்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பரேலியில் கரிம உரம் மற்றும் பசு சிறுநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.