பள்ளியை களேபரம் ஆக்கி நான் `விவசாயி’ படம் பார்த்த கதை! : 60ஸ் கிட் பால்ய நினைவுகள் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விவசாயி படத்துக்கு தரை டிக்கெட் 35 பைசாவிலிருந்து 38 பைசாவாக உயர்த்தி விட்டார்கள்.
3 பைசாவுக்கு ஒரு சாதா கரும்புசர்க்கரை டீ குடிக்கலாம்.,
முருகன் கொண்டு வந்து கொடுத்த பழைய 35 பைசா ஆரஞ்ச் கலர் டிக்கெட் ஒரு கத்தை இருந்தது., டேய் மோகா இதை 38 பைசாவாக திருத்தினால் நாளை மேட்னிஷோ போகலாம்.
அடுத்த நாள் விவசாயி படத்தின் மேட்னி ஷோவுக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது.
எனக்கு அன்று எந்த கிளாசிலேயும் நிலை கொள்ளவில்லை, முருகன் பெரிய பாரத்தை என் மேல் சுமத்தி விட்டான். காராளகுமாரிடம் கருப்பு கலர் பேனாவை இண்டர்வலில் கேட்டேன்.
அவன் எதற்க்கு என்றான். நான் விஷயத்தை சொன்னேன். அய்யோ என்றான், நீயும் வாவேடா என்றேன். பேனாவை கொடுத்து விட்டான்.
அன்று மாலை முருகன் நொய்யல் மணல் மேட்டிற்கு வந்தான் அங்கே அசர்பலி, பிரகாஷ் இருந்தனர்.
நான் பரீட்சை பேட் சகிதமாக காராளகுமாரின் பேனாவுடன் சென்றேன். ஆக 5 பேர் மட்டும் போவதாக முடிவு செய்தோம்., பிரகாஷ் அசர்பலியியிடம் தலா 5 பைசா முருகன் வாங்கிக் கொண்டான்.
என் கையில் 5 டிக்கெட்டை கொடுத்து விட்டு முருகன் சென்றான்., முருகன் 9 ம் வகுப்பு படிக்கின்றான். இரண்டு வருடம் பெயில் 11 ம் வகுப்பு படிக்க வேண்டியவன் நல்ல தைரியசாலி. எங்கள் பக்கத்து வீட்டுபையன்.
நான் 7-ம் வகுப்பு.
35யை 38பைசாவாக மாற்றிவிட்டேன். லேசாக வித்தியாசம் தெரிந்தது.
இதையெல்லாம் பார்க்க மாட்டாங்கடே டிக்கட் கலர்தான் பார்ப்பாங்க என்றான் முருகன்.
எனக்கு இது திரில்லாக இருந்தது.
ஆக ஐந்து பேர் அடுத்த நாள் மேட்னிஷோவுக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது. முருகன் சொன்னான், டேய் மோகா யார் வந்தாலும் வராவிட்டாலும் நாம இரண்டு பேரும் போறோம், ஒரு வழி வெச்சிருக்கேன் என்றான் முருகன்.
காலையில் ஸ்கூலுக்கு போகும் வழியில் முருகன் நொய்யல் கரையில் உட்கார்ந்திருந்தான். ஸ்கூலுக்கு இன்னும் 10 நிமிடமிருந்து ஸ்கூலுக்கு லேட் ஆகுது என்றேன்..
சும்மா இருடா நீ ஸ்கூலுக்கு போயி ஜில்லா கலேக்டரா ஆக போறே..
முருகன் டக்கென்று காக்கி டவுசர் பாக்கெட்டிலே இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான்.
பொட்டலம் நெழிந்தது, அப்படியே அதை தரையில் கொட்ட, ஒரு பச்சை பாம்பு தரையில் நெளிந்தது. அதன் வாய் ஒரு பின்னுசியால் குத்தப்பட்டிருந்தது. பின்னுசியில் லேசான ரத்தக்கறை. முருகன் சொன்னான் மோகா இதை மதியம் சாப்பிட்டதும் பின்னூசியை கழட்டி 11B வகுப்புக்கு முன் போட்டு விடுவேன். மதியம் ஒன்றரை மணி சுமாருக்கு இந்த களோபரம் உன் வகுப்புக்கு வந்த உடன், நீ தெற்கு நொய்யல் குட்டி சுவர்க்கு அசர்பலி காராளகுமார் பிரகாசுடன் வந்து விடு என்றான்.
நாம் கெஜலட்சுமி தியேட்டருக்கு 2மணிக்குள் சென்று விட வேண்டும் என்றான். நான் எப்படி தியேட்டருக்குள் செல்வது என்றேன்.
நீ நைநையிங்கமால் வந்திடு எப்படி போவது என்பதை நான் சொல்கிறேன் என்றான்.
டேய் அசர்பலி, பிரகாஷ், காராளகுமாரிடம் ஆளுக்கு 5 பைசா கொண்டு வர சொல்லு. காராளகுமார் பேனா கொடுத்திருக்கிறான் அதனால் 5பைசா.. இண்டர்வலில் டீ குடிக்கலாம் என்றான்..
நான் சிட்டாக பறந்து சுவறேறி குதித்து போனேன். பிரேயர் முடிந்து வகுப்புகளுக்கு போகும் மாணவர்களோடு சென்று கலந்து கொண்டேன.
காலை வகுப்புகளில் சிறிதும் கவனமில்லை. மதியம் உணவு இடைவேளை பெல் அடித்தவுடன் சாப்பிட்டு விட்டு, காராளகுமார்., அசர்பலி, பிரகாசிடம் பையை எடுத்துக் கொண்டு என்கூட வாங்கடா மதியம் ஸ்கூல் லீவு என்றேன்.
எல்லோரும் ஒரே குரலில் தலைவர் யாராவது மண்டையை போட்டுட்டாங்களா என்றார்கள். இல்லையடா இன்று மதியம் ஸ்கூல் லீவு தான். நீங்கள் கீழ் கிரவுண்டில் நில்லுங்கள் நான் முருகனை பார்த்து வருகிறேன் என்று மாடிப்படியில் வேகமாக ஏறிச்சென்றேன்.
எதிரே கிளாஸ் டீச்சர் வந்தார். ஏன்டா பையை எடுத்துட்டு போறே என்றார். சார் 11ம் வகுப்பு சேகர் பாடம் சொல்லி தருகிறேன் என்றான் அவன் வகுப்புக்கு செல்கிறேன் சார் என்றேன். அதற்கு ஏன்டா பேய் முழி முழிக்கிறாய் உன் நடத்தையே வரவர சரியில்லை, பெரிய கிளாஸ் பசங்களோட உனக்கு என்னடா வேலை என்று சந்தேகத்துடன் சென்றார்.
எதிரே முருகன் அந்த பொட்டலத்துடன் வந்தான் அது நெளிந்து கொண்டிருந்தது., டேய் பையோடு வந்துட்டையா போய் நொய்யல் குட்டிசுவறுக்கு போ நான் வந்து விடுகிறேன் என்றான்.
முருகன் 11பி வகுப்புக்கு சென்று பொட்டலத்தை பிரித்து போட்டுவிட்டு பாம்பு பாம்பு என்று கொடூரமாக சத்தம் போட்டான்.
அந்த வகுப்பிலிருந்து மாரிசாமி டேய் பாம்புடா எல்லாம் ஓடுங்கடா என்றான். பாம்பும் அருகிலிருந்த ஒவ்வொரு வகுப்பறைக்குள் விசிட் செய்தது அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் கீழே ஓடி ஹெட் மாஸ்டர் அறைக்கு முன் திரண்டனர் நானும் முருகனும் கூட., வெளியே ஒரு டைரியுடன் வந்த ஹெட்மாஸ்டர் விவரத்தை கேட்டு பதட்டப்படாமல் பாம்பு யாரையும் கடிக்கவில்லை என்று உறுதிபடுத்தி கொண்டு.,
வாட்ச்மேன் முனிசாமியை அழைத்து மாடியில் பாம்பாமே போய் பார்த்து விட்டு வா என்றார். ஒரு தடி இருந்தா தான் ஆகும் என்றவன், பக்கத்து ஸ்போர்ட்ஸ் ரூமுக்கு சென்று ஒரு கிரிக்கெட் ஸ்டம்பை எடுத்துக்கொண்டு மாடிக்கு ஓடினான் ஹெட் மாஸ்டர். அறை முன்பு எல்லா வாத்தியார்களும் திரண்டு விட்டனர். அய்யோ அய்யோ வென்று வாட்ச் மேன் கத்தியபடி ஓடிவர ஹெட் மாஸ்டர் என்ன முனிசாமி என்றார்,
சார் பாம்பு படிக்கட்டிலே வருது, கண் கொத்தி பச்சை பாம்பு சார் என்றான்.
பாம்பும் வேகமாக படியில் வர டேய் மோகா கிளம்பு மணி ஒண்ணே முக்கால் ஆகுது, 2 மணிக்கு தியேட்டரிலே இருக்கனும் இரண்டரை மணிக்கு படம் போட்டு விடுவான் என்றான் கறாறாக, டேய் முனிசாமி பெல் அடி ஸ்கூல் லீவுன்னு சொல்லிவிடு பாம்பு ஆக்ரோசமாக படி இறங்கிக் கொண்டிருந்தது.
அது வந்த வேகத்தில் திறந்திருந்த ஹெட்மாஸ்டர் ரூமில் புகுந்தது சோலி சுத்தம் என்ற முருகன் ஓடுமா மோகா என்றவன், அவங்க எங்கடா என்றான். அசர்பலியும் காராளகுமாரும் பிரகாசும் வேகமாக வந்தனர்.
டேய் மோகா அவங்களை குட்டி சுவருகிட்டேதானே இருக்கச் சொன்னேன் என்றவன், போலாம் வாங்கடா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேகமாக கீழ் கிரவுண்டுக்கு போனோம். டிக்கெட் எங்கட என்றான் முருகன்.
நான் சரித்திர நோட்டிலிருந்து ஜந்து டிக்கெட்டை எடுத்து கொடுத்தேன். பிரகாஷ் அசர்பலி காராளகுமாரிடம் தலா 5 பைசா வாங்கி பாக்கெட்டுலே போட்ட முருகன் வேகமாக வாங்கடா என்றான்.
எம்ஜிஆரின் விவசாயி படம் நூறுநாள் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு நாடோடிப் பழங்குடியின தம்பதி மட்டும் 37பைசா டிக்கட்டுக்கு போய் கொண்டிருந்தனர்.
டேய் சற்று பொறுங்கடா என்ற முருகன் அவர்கள் டிக்கட் வாங்கி சென்றதும் டேய் சத்தமில்லாமல் குனிஞ்சி வாங்கடா டிக்கெட் கொடுக்கறவன் பார்த்த அம்பேல் என்றான்.
டிக்கட் கவுண்டரை குனிந்து கடந்து சென்றோம். முருகன் ஜந்து டிக்கெட்டை ஒன்றாக வைத்து 37பைசா மேல் விரலை வைத்துக்கொண்டான்.
டிக்கெட்டை எந்த சந்தேகமும் இல்லாமல், வாங்கிய தியேட்டர் வாசலிருந்த டிக்கெட் கலெக்டர் டிக்கெட்டை கிழித்து கொடுக்க நாங்கள் சென்று அமர்ந்தோம். எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை... நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. கலைஞர் அகலமான முனிசிபாலிட்டி துடைப்பத்தில் வீதியை கூட்டிக்கொண்டிருந்தார்.
சில விசில்கள் பறந்தது. ஒரு வழியாக படம் போட்டனர் முருகன் ஏனோ வாசலையே பார்த்து கொண்டிருந்தான்.
நான் படத்தில் பயமில்லாமல் லயிக்க ஆரம்பித்து விட்டேன். எம்ஜிஆர் இப்படித்தான் இருக்க வேண்டும். கே.ஆர்விஜயாவிடம் வசனம் பேசிக் கொண்டிருந்தார். உங்க சொற்படியே என்று கேஆர்விஜயா பாட, முருகன் என் தொடையை கிள்ளினான் அங்கே பாருடா என்றவன் டிக்கெட் கலெக்டர் பேட்டரி அடித்து டிக்கெட்டை செக் செய்து கொண்டிருந்தார்.
எனக்கு வியர்த்து கொட்டியது எம்ஜிஆர் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றார். காராளகுமாரின் டவுசர் நனைந்து விட்டது. நான் பிரகாசின் டவுசர்தான் நனைந்திருக்கும் என்று நினைத்தேன்.
டிக்கெட் கலெக்டர் 5 டிக்கெட் கொடுத்தது நீதானே என்று முருகனிடமிருந்த 38 பைசா என்று திருத்திய பாதி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நஞ்சப்பா ஸ்கூல் பசங்களா என்றான்.
இங்கேயே நாலு சாத்து சாத்தியிருப்பேன் ஸ்கூல் பசங்களா போயிட்டீங்க என்றான். முருகன் அந்த சூழலிலும் பயக்காமல் நின்றான்.
எனக்கென்னடா பசங்களா டிக்கெட் கொடுக்கறவனுக்கு 1.90பைசா சார்ட் என்றவன் வெளியே முதலாளியும் மேனேஜரும் நிக்கறாங்க நீங்களாச்சி அவங்களாச்சி என்றான்.,
வேட்டி கூலீங்கிளாஸ் போட்டுக் கொண்டு முதலாளியும் பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு மேனேஜரும் நின்றிருந்தனர். நஞ்சப்பா பசங்களா பெரிய அரசியல்வாதியா வருவீங்கடா என்றவர், மேனேஜரிடம் இவர்களை காரிலேற்றி ஸ்கூலுக்கு கொண்டுபோயி விடு என்றார்.
நான் முருகனை பார்த்துக்கொண்டிருந்தேன் முருகன் மெயின் கேட்டை பார்த்தவன் அது கால்பாகம் சங்கிலியில் பிணைத்து திறந்திருந்தது. மோகா உட்ரா ஜுட் என்றான்.
நாங்கள் கேட்டை தாண்டி நொய்யலில் புகுந்து ஜம்பணை வழியாக கருவம்பாளையம் சென்று விட்டோம். டேய் மோகா சாயங்காலம் நொய்யலுக்கு வாடா என்றான். எப்படியும் ஸ்கூலுக்கு பிரகாசையும் அசர்பளியையும் காராளகுமாரையும் விசாரித்து இருப்பாங்க என்று எண்ணினேன்.
முருகன் தான் சற்றும் பயமில்லாமல் இருந்தான். மாலை நொய்யலுக்கு எல்லோரும் வந்திருந்தனர். காராளகுமார் அதே டவுசரை போட்டு வந்திருந்தான் யூரின் மணம் அடித்தது.
பாம்பு மேட்டர் பெரிதாக யாருக்கும் தெரியலையாம் அந்த பாம்பு ஹைட்மாஸ்டர் அறையிலே பிடிபட்டதாம். எல்லோரையும் ஹெட்மாஸ்டர் காலையில் விசாரிப்பாராம் முருகனின் மேல்தான் கோபமாக இருந்தாராம்.
காலையில் ஹெட்மாஸ்டர் நீ தாண்டா தலைவன் என்று முருகனிடம் ஸ்கூல் கிரவுண்டில் கிடக்கும் 100 கண்ணாடி சில்களை பொருக்க சொல்லி ஸ்கேலில் பின்புறம் நாலு அடி அடித்து போடா என்றார்.
நீ முருகனுடன் ஓடியவனா என்று கேட்டு என்னையும் ஸ்கேலில் பின்புறம் அடித்து எல்லோரும் போங்கடா என்றார்.
நாங்கள் இண்டர்வலில் முருகனை பார்க்கச் சென்றோம். 20 சில்கள்கூட தேறவில்லை என்று புலம்பினான். மதியம் உணவு இடைவேளையில் முருகனை பார்க்கச் சென்றேன். கீழ் கிரவுண்டில் காம்பவுண்ட் ஓரம் உட்கார்ந்து சில கண்ணாடி பாட்டில்களை உடைத்துக் கொண்டிருந்தான்... 100 கண்ணாடி சில் கணக்குக்காக.
நன்றி,
சுதா மோகன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...