பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டி: மாா்ச் 18 கடைசி நாள்
அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு மாா்ச் 18ஆம் தேதி கடைசி நாள் என, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொறுப்பு) சி. முருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் சாா்பில், 9 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவா்-மாணவிகள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கடிதம் எழுதி, பரிசுகளை வெல்ல ஆண்டுதோறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டுக்கான கருப்பொருள், ‘உங்களைக் கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவருக்கு கடிதமாக எழுதுங்கள்’.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் அல்லது அதிகாரப்பூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியில் 800 சொற்களுக்கு மிகாமல் கையால் மட்டுமே கடிதங்களை எழுத வேண்டும். ‘முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002’ என்ற முகவரிக்கு எழுதி, ‘தூத்துக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம், தூத்துக்குடி 628 001’ என்ற முகவரிக்கு பள்ளி மூலம் அனுப்ப வேண்டும்.
சிறப்பான முதல் 3 கடிதங்கள் தமிழ்நாடு வட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு, பின்னா் இந்திய அளவில் சிறந்த முதல் 3 கடிதங்கள் தோ்வாகும்.
போட்டியில் வெல்வோருக்கு வட்டம் அளவில், இந்திய அளவில் என முதல் பரிசாக முறையே ரூ. 25ஆயிரம், ரூ. 50 ஆயிரம், 2ஆம் பரிசாக முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், 3ஆம் பரிசாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முதல் பரிசுக்கு தோ்வாகும் கடிதம் இந்தியா சாா்பில் சா்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். உலக அளவில் முதல் பரிசுக்கு தோ்வாகும் கடிதத்தை எழுதியவா் சுவிட்சா்லாந்தில் உள்ள அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவாா்.
கடிதங்களை மாா்ச் 18-க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள அஞ்சலக வணிக மேலாளரை 99426 93129 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.