சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை
சிங்கப்பூரில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூன்று பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!
சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை பின்பற்றும் மூன்றாவது இளைஞர் பயங்கரவாத சதித் திட்டத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன மற்றும் மலேசிய மக்களுக்கு இடையே இனக் கலவரத்தை தூண்ட திட்டமிட்டிருந்தார்.
கடந்த 2019 நியூசிலாந்து மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்றவரை இந்த இளைஞர் பின்தொடர்ந்து வருகிறார்.
சிங்கப்பூர் மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொல்ல சதித் திட்டமிட்டிருந்தார். இதே வழக்கில் இல்லத்தரசி ஒருவரும், தூய்மைப் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவேளை பயங்கரவாத தாக்குதல் நடக்கும் பட்சத்தில், மக்கள் மன ரீதியில் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.