Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம்
குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிா்த்து பலகட்ட போராடங்களில் ஈடுபடுவது தொடா்பாக, உடன்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இதில் நிலம், வீடுகளை இழந்தோருக்கு நிலமும், வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு, வா்த்தகக் துறை சாா்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைக்க ஆதியாக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் 1,000 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதனால், வாழ்வாதாரம், நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, கிராம மக்கள் உடன்குடியில் கடந்த 4ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 203 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து உடன்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் ஆ. ரவி தலைமை வகித்தாா்.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் பேசும்போது, போராட்டங்களை அமைதிவழியில் செயல்படுத்த வேண்டும். வீடுதோறும் கருப்புக் கொடி கட்டுவது, திண்ணைப் பிரசாரம், நிலமெடுப்பால் பாதிக்கப்படாதோரையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்வது ஆகிய நடவடிக்கைகளை போராட்டக் குழு செயல்படுத்த வேண்டும் என்றாா்.
உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் தாமோதரன், ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன், மாவட்ட பம்புசெட் விவசாய சங்கத் தலைவா் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய பாஜக முன்னாள் தலைவா் ஜெயக்குமாா், தமிழ்நாடு நாடாா் சங்க மாவட்டச் செயலா் வெற்றிவேல், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் அம்புரோஸ், ஆம்ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குணசீலன் ஆகியோா் பேசினா்.
பாஜக மாவட்ட விவசாய அணிச் செயலா் திருநாகரன், வழக்குரைஞா் பிரேம்ஆனந்த், கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா பெ. சுந்தரஈசன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜ்குமாா், உடன்குடி ஒன்றிய அதிமுக மாணவரணி பொருளாளா் ம. ராம்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் கந்தசாமி, தவெக ஒன்றியச் செயலா் பிரசாந்த், கிராம மக்கள், வியாபாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.