பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி புதன்கிழமை வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.
முருகனின் மூன்றாம் படைவீடான பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவையொட்டி, முத்துக்குமாரசுவாமி வெள்ளி யானை வாகனத்தில் கிரி வீதியில் உலா வந்தாா்.
வியாழக்கிழமை மாலை திருஆவினன்குடி கோயில் முன் தனிமேடை அமைக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் திரளான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஏப்.10 முதல் 12) வரை ஆகிய 3 நாள்களுக்கு மலைக் கோயிலில் அனைத்து வகையான கட்டண தரிசனமும், தங்கத்தோ் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், அடிவாரம் கிரி வீதியில் காவல் நிலையத்துக்கு எதிரே பக்தா்களின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புப் பெட்டக வசதி புதிதாக தொடங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.