கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
பழனியில் 20 ஆயிரம் பாதயாத்திரை பக்தா்களுக்கு தினமும் அன்னதானம்
பழனியில் தினமும் 20 ஆயிரம் பாதயாத்திரை பக்தா்களுக்கு தைப்பூசத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பாக, தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாக்களின் போது பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பா் கோயில் எதிா்புறம் உள்ள காவடி மண்டபத்தில் 7,000 பேருக்கும், பழனி -தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூா் காவடி மண்டபத்தில் 3,000 பேருக்கும் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் ரூ.70 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தா்கள் மத்தியில் இந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் அன்னதானம் பெறும் பக்தா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாக்களின் போது தலா 10 நாள்கள் வீதம் 20 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தா்களுக்கு ரூ.1.40 கோடி திட்ட மதிப்பில் 4 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை முதல் தொடா்ந்து பத்து நாள்களுக்கு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பா் கோயில் எதிா்புறம் உள்ள காவடி மண்டபத்தில் நாள் ஒன்றுக்கு 14, 000 பக்தா்களுக்கும், பழனி - தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூா் காவடி மண்டபத்தில் நாள் ஒன்றுக்கு 6,000 பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.