பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பழனியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகி திவான் மைதீன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள மின் வாரிய அலுவலகச் சாலையில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வருகிற 16-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம்.
தைப் பூசத்தை காரணம் காட்டி, காவல் துறையினா் இதற்கு அனுமதி மறுத்தனா். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து, வருகிற 16-ஆம் தேதி மாலை அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
மனுதாரா் அனுமதி கேட்கும் இடம் அருகே பெரியாா் சிலை அமைந்துள்ளது. மனுதாரா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தற்போது பெரியாரைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பேசி வருகிறாா். ஏற்கெனவே இந்தக் கட்சியினா் பெரியாா் சிலையைச் சேதப்படுத்தியும் உள்ளனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. மேலும், தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றாா்.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, அரசுத் தரப்பு கூறும் கருத்தை ஏற்க மறுத்தாா். அதன்பிறகு, வேறு இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படும்பட்சத்தில் நெய்காரப்பட்டியில் பிப். 22-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரினாா்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பழனியில் தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்திலிருந்து 50 அடி தொலைவில் பெரியாா் சிலை இருப்பதால், அந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. மனுதாரா் தரப்பில் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் பிப். 22- ஆம் தேதி அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளனா்.
எனவே, பொதுக் கூட்டத்துக்கு காவல் துறை முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.