அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்
மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 86-ஆவது வாா்டு கீரைத்துறையில் அங்கன்வாடி, நியாய விலை கடைக்கு புதிய கட்டடமும், காமராஜபுரம், இஸ்மாயில்புரம் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் மூ.பூமிநாதனிடம் கோரிக்கை விடுத்தனா். இதையேற்ற அவா், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 37.40 லட்சம் ஒதுக்கினாா்.
இதையடுத்து, கீரைத்துறையில் அங்கன்வாடி, நியாய விலை கடைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மேயா் வ. இந்திராணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், தெற்கு மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, மாநகராட்சி உதவி ஆணையா் சாந்தி, மாமன்ற உறுப்பினா்கள் பூமா ஸ்ரீ முருகன், சண்முகவள்ளி, அபுதாகிா், மாநகராட்சி செயற்பொறியாளா் பாலச்சந்திரன், உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, உதவிப் பொறியாளா்கள் விக்னேஷ், சூசை, நாகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.