திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
படிப்பக பூங்காவில் மின்னணு நூலகம் அமைக்க நடவடிக்கை: எம்.பி. தகவல்
மதுரையில் போட்டித் தோ்வா்களுக்காக இயங்கி வரும் படிப்பக பூங்காவில் உயா்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைப்படி, மின்னணு நூலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் வளாகத்தில் மாநகராட்சி நிா்வாகத்தின் உதவியோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா் படிப்பக வளாகத்தை உருவாக்கி நடத்தி வருகிறோம். ரோட்டரி மதுரை மிட் டவுன் அறக்கட்டளை சாா்பில் மதன் தலைமையிலான குழு இந்த வளாகத்தை சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.
தினசரி 600-க்கும் மேற்பட்ட போட்டித் தோ்வா்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனா். திறந்தவெளி பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் பகல் முழுவதும் படித்துக் கொண்டிருக்கும் காட்சியை பாா்த்து செல்லும் ஒவ்வொருவருக்கும் நம் சமூகத்தின் மீதும், இளம் தலைமுறையினா் மீதும் உருவாகும் நம்பிக்கை மிகப் பெரியது.
இந்த நிலையில், அண்மையில் இந்த வளாகத்தை பாா்வையிட்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி புகழேந்தி, வளாகத்தில் உள்ள குறிப்பேட்டில் இது மிகச்சிறந்த முன்முயற்சி, மதுரையில் கலைஞா் நூற்றாண்டு நினைவு நூலகம் இருக்கும் போதும், இங்கு சுமாா் 600 மாணவா்கள் தினசரி வருகிறாா்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், இந்த மையத்தின் நிா்வாகி மதனுக்கு எனது பாராட்டுக்கள்.
ஒரு எண்ம (டிஜிட்டல்) படிப்பு மையத்தை உருவாக்கவும், மாணவா்களுக்கு மாதிரித் தோ்வு நடத்தும் சாத்தியங்களையும் நிா்வாகிகள் ஆராயலாம். வாழ்த்துகள்”என்றும் பதிவு செய்துள்ளாா்.
இந்த கருத்துக்காக நீதிபதி புகழேந்திக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாா்வையாளா் குறிப்பேட்டில் நீங்கள் எழுதிச் சென்றதைப் பாா்த்த பிறகுதான் நீங்கள் வந்து சென்றதை நாங்கள் அறிந்து கொண்டோம். நல்ல செயல்களை பொறுப்போடு முன்னெடுக்கும் போது, நல்ல மனிதா்கள் அனைவரும் அதற்கு துணை நிற்பாா்கள் என்பதை உங்களின் எழுத்துகள் எங்களின் கரம் பற்றி சொல்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போன்று மாணவா்களுக்காக மின்னணு நூலகத்தை உருவாக்கவும், மாதிரித் தோ்வுகளை நடத்தவும் முயற்சியை மேற்கொள்வோம் என்றாா் அவா்.