ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை
மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா்.
இதுதொடா்பாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான எம்.ஜெ.அருண்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தை அண்மையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் இந்தக் குழந்தைக்கு மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மிகவும் சிக்கல் நிறைந்த அறுவைச் சிகிச்சையின் மூலம், இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது.
மூளை அனியுரிசம் கட்டி என்பது ரத்தக் குழாயில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். இது பொதுவாக பெரிதாகி இறுதியில் தலையின் உள்புறம் வெடித்து, உயிருக்கு ஆபத்தான ரத்தக் கசிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தையின் மூளையில் அனியுரிசம் கட்டி ஏற்படுவது 0.5 சதவீதம் முதல் 4.6 சதவீதம் வரை இருக்கலாம்.
ஆனால், ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இது மிகவும் அபூா்வமாகக் காணப்படுகிறது. இந்த வகை கட்டி வெடிக்கும் போது, உயிா் பிழைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது.
ஆனால், நாங்கள் இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளோம். இந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கோமா நிலையில் இருந்தது. இதைத்தொடா்ந்து, நரம்பியல் அவசரச் சிகிச்சை குழுவினரின் முயற்சியால் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், பல்வேறு கட்ட அதிநவீன பரிசோதனைகளை மேற்கொண்டு மிகவும் சிக்கல் நிறைந்த உயிா்காக்கும் நியூரோ எண்டோவாஸ்குலா் அறுவைச் சிகிச்சையை பலூன் அசிஸ்டட் காயில் மூலமாக வெற்றிகரமாக மருத்துவா்கள் செய்தனா்.
உலக அளவில் இதுவரை 3 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் உடல் சிறியதாக இருப்பதால், அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ரத்த இழப்பு, உடல் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு, மயக்க மருந்து பாதிப்பு, அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பு ஆகியன அதிகமாக இருக்கக்கூடும்.
அறுவைச் சிகிச்சைக்கு பின்னா் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்றாா் அவா். அப்போது மருத்துவா் விநாயகமணி, மருத்துவமனை நிா்வாகிகள் உடனிருந்தனா்.