கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த பாலகுமரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நான் தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்தேன். என்னை இளநிலை உதவியாளா் பணியிலிருந்து ஆய்வக உதவியாளராகப் பணியிறக்கம் செய்து, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே வழக்கு தொடுத்தேன். இதில், எனக்கு மீண்டும் இளநிலை உதவியாளா் பணி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தேனி மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே, தேனி மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணிக்கு ஒரு மாத சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா் நீதிபதி.
இந்த சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் அரசுத் தரப்பில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாஸ்கரன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல், மற்றொரு தனி நீதிபதி, சிறைத் தண்டனை விதித்தாா். இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றனா்.