`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
பழைய பூங்காக்கள், சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும்: மேயா்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்கள், விடுபட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மேயா் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியது,
மக்கள் குறைதீா் முகாமில் இதுவரை சுமாா் 2,500- க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. சுமாா் 1700 சாலைகள், 2100 தெருவிளக்குகள் ஆகியவை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.
16, 17, 18ஆவது வாா்டு பகுதிகளில் மழைநீா் தானாக வழிந்தோடும் வகையில் ரூ.10 கோடியில் 8 கி.மீ., தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளது. கடற்கரை பகுதிகளில் 5 இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெறவுள்ளன.
மாநகராட்சி ஸ்டெம் பூங்கா அருகே மழைநீரை சேமிக்கும் வகையில் புதிய குளம், அதைச்சுற்றி நடைபயிற்சி தளம், ராஜீவ் நகா் கோக்கூா் குளம் சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் நடைபயிற்சி தளம் ஆகியவை அமைக்கப்படும். மேலும், சிவன் கோயில் தெப்பகுளம் தூா்வாரி சீரமைக்கப்படும் என்றாா்.
மொத்தம் 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசியது:
மாநகா் பகுதிகளில் புதிதாக பூங்காக்கள் அமைப்பதற்கு பதிலாக, பராமரிப்பு இன்றி கிடக்கும் பழைய பூங்காக்களை சீரமைத்து, அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். குடிநீா் குழாய்களில் கசிவு ஏற்பட்டு கழிவுநீா் கலந்து வருவதை சரி செய்ய வேண்டும். மேல சண்முகபுரம் பகுதியில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் அப்பகுதியை விட்டு பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.
பருவம் தவறி பெய்யும் மழையால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உப்பளத் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
இதற்கு மேயா் ஜெகன் பெரியசாமி பதிலளித்து பேசுகையில், அனைத்து பூங்காக்களையும் சீரமைக்கவும், விடுபட்ட சாலைகளை சீரமைக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும், சுகாதாரமான குடிநீா் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், துணை ஆணையா் சரவணகுமாா் பொறியாளா் தமிழ்செல்வன் உதவி பொறியாளா் சரவணன் உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா் வெங்கட்ராமன் நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன் , மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைசெல்வி, நிா்மல்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.