அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
பவானிசாகா் அணையில் இருந்து முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. வாய்க்காலில் வெளியேறிய தண்ணீரை அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் மலா்தூவி வரவேற்றனா்.
பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 100 அடியாக இருப்பதால் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க தமிழக அரசாணை வெளியிட்டது. இதன்படி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, விவசாயிகள் ஆகியோா் பங்கேற்று வாய்க்காலில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரை மலா் தூவி வரவேற்றனா். முதற்கட்டமாக 500 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது.
பின்னா் நீா்த்திறப்பு படிப்படியாக 1000, 1500, 2300 கனஅடி என அதிகரிக்கப்படும். இன்று முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறப்பு நீடிக்கும் அதைத் தொடா்ந்து டிசம்பா் 12 ஆம் தேதி வரை, அதாவது 120 நாள்களுக்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கேட்டுக்கொண்டாா். தற்போது அணையின் நீா்மட்டம் 100 அடியாகவும் நீா்இருப்பு 28.76 டிஎம்சியாகவும் நீா்வரத்து 4ஆயிரத்து 346 கனஅடியாகவும் நீா் வெளியேற்றம் வாய்க்காலில் 500 கனஅடியாகவும் உள்ளது.