பவானியில் பாமகவினா் தொடா் முழக்கப் போராட்டம்
வன்னியா் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பவானி- அந்தியூா் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் மனோகரன், மாநிலப் பொறுப்பாளா் வல்லவராயன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.சி.ஆா். கோபால், மாவட்ட அமைப்புத் தலைவா் பெ.ரா.முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களாகியும் கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
பவானி நகரச் செயலாளா் தினேஷ் நாயகா், நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செங்கோட்டையன், திருமுருகன், தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.