பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞா் கைது
பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பவானி சொக்காரம்மன் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா், மனைவியுடன் காசிக்குச் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா் கடந்த 24-ஆம் தேதி திருடிச் சென்றாா்.
இதேபோல, பவானி கவுண்டா் நகா் பிரிவு அருகே அடுத்தடுத்து இரு தேநீா் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இச்சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபா் என்பதும், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடியைச் சோ்ந்த டேவிட் (எ) சொக்கலிங்கம் (31) என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், அவிநாசி காவல் நிலையத்துக்கு வந்த டேவிட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இவா் மீது கள்ளக்குறிச்சி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.