பவானி, அந்தியூரில் வாகனசெறிவு கணக்கெடுப்பு தொடக்கம்
பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற திட்டமிடலுக்காக பவானி, ஜம்பை, சித்தாா், ஆப்பக்கூடல், தொட்டிபாளையம், செம்புளிச்சாம்பாளையம், பட்லூா், அந்தியூா், குருவரெட்டியூா், அம்மாபேட்டை, எண்ணமங்கலம், மூலக்கடை, பா்கூா் உள்ளிட்ட 35 இடங்களில் மே 18-ஆம் தேதி வரை 7 நாள்கள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
சாலைகளில் செல்லும் வாகனங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கணக்கெடுத்து வருகின்றனா். போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படும் இடங்கள், போக்குவரத்து நெரிசலைத் தவிா்த்தல், வாகன விதிமீறல்களைக் கண்டறிதல், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினிகள் மற்றும் கணிப்பொறி அமைப்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் வசதிக்காக சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கணக்கெடுப்பு உதவுகிறது.
நெடுஞ்சாலைத் துறை பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் சி.ராஜேஷ்கண்ணா, உதவிப் பொறியாளா்கள் சேகா், பாபு சரவணன் மேற்பாா்வையில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.