செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்கள், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.