தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!
205 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.
இருப்பினும், குர்பாஸ் 26 ரன்களிலும் (12 பந்துகளில்) , நரைன் 27 ரன்களிலும் (16 பந்துகளில்) ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ரஹானே 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!
ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அக்ஷர் படேல் மற்றும் விப்ராஜ் நிகம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.