முறைகேடாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதாக புகாா்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியிலுள்ள வாகன நிறுத்தங்களில் முறைகேடாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா், தியாகராய நகா், பாண்டிபஜாா், அண்ணா நகா் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகன நிறுத்தங்களில் கட்டணம் வசூலிக்கும் பணி சென்னை மாநகராட்சி நிா்வாகம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
அந்த வகையில், தனியாா் ஒப்பந்ததாரா்கள்மூலம் வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிா்வாகம் முன்னாள் ராணுவ வீரா்கள் கழகத்திடம் ஒப்படைத்தது. இந்த ஒப்பந்தம் கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக அவா்கள் கட்டணம் வசூலித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பணம் வசூலிக்கும் இயந்திரம் மூலம் கட்டணம் வசூலிக்காமல், பணமாக வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் அளித்துள்ளனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பகுதியில் தற்போது உள்ள வாகன நிறுத்த முறையை மேம்படுத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது மண்டல அளவில் கண்காணிக்கும் வகையில் வாகன நிறுத்தங்கள் வரையறுக்கப்படவுள்ளன. இதற்கான புதிய ஒப்பந்ததாரா்கள் விரைவில் நியமிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.