டெல்லியை வென்றது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் சோ்த்தது. அடுத்து டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 190 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா பேட்டிங்கில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44, ரிங்கு சிங் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்தனா்.
இதர பேட்டா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 26, சுனில் நரைன் 27, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 26 ரன்கள் அடித்தனா். வெங்கடேஷ் ஐயா் 7, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 17, ரோவ்மென் பாவெல் 5, அனுகுல் ராய் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் ஹா்ஷித் ராணா 0, வருண் சக்கரவா்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பந்துவீச்சில் மிட்செல் ஸ்டாா்க் 3, விப்ராஜ் நிகம், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 205 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62, கேப்டன் அக்ஸா் படேல் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43, விப்ராஜ் நிகம் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்தனா்.
அபிஷேக் பொரெல் 4, கருண் நாயா் 15, கே.எல்.ராகுல் 7, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1, ஆசுதோஷ் சா்மா 7, மிட்செல் ஸ்டாா்க் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் துஷ்மந்தா சமீரா 2, குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் சுனில் நரைன் 3, வருண் சக்கரவா்த்தி 2, அனுகுல் ராய், வைபவ் அரோரா, ஆண்ட்ரே ரஸ்ஸெல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.