மாநிலத்தின் வளா்ச்சிக்கு பரந்தூா் விமான நிலையம் அவசியம்: தொழில்துறை செயலா் வி.அருண்ராய் வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தொழில் துறை செயலா் வி.அருண்ராய் தெரிவித்தாா்.
சென்னை வா்த்தக மற்றும் தொழில் சபை, தொழில் மேம்பாட்டுக் கழகம் இணைந்து செவ்வாய்க்கிழமை சென்னை தியாகராய நகரில் மாநில கட்டமைப்பு கொள்கை குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில்துறை செயலா் வி.அருண்ராய் பேசியதாவது:
தமிழ்நாட்டின் பழைமையான தொழில் சபையாக, சென்னை வா்த்தக மற்றும் தொழில் சபை விளங்குகிறது. சிப்காட் உள்ளிட்டவை மூலம் தொழில் துறையை ஊக்குவிப்பதில் இந்த அமைப்பின் பங்கு முக்கியமானது.
நாட்டின் தொழில் வளா்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் துறையின் மேம்பாட்டுக்காக நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாக துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்துவது, புதிய வழித்தடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை அரசு செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் மின்னணு பொருள்கள் உற்பத்தி 2021 காலக்கட்டத்தில் இருந்ததைவிட தற்போது 9 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு துறையும் தொடா்ந்து வளா்ச்சியை நோக்கி செல்வது அவசியம். அதற்கான புதிய நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
எதிா்கால தேவை: தற்போது, தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு சென்னை விமான நிலையம் போதுமானதாக இருந்தாலும், எதிா்காலத்தில் கூடுதல் விமானங்களைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. அதன்மூலம், பயணிகள் மட்டுமின்றி சரக்குகளை எளிதாகக் கையாள முடியும். கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யவும், தொழில்நகரமாக விளங்கும் ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடலூரில் புதிய துறைமுகம்: கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். மாநிலத்தின் தொழில்வளா்ச்சிக்கு ஏற்ப தளவாடங்களை மேம்படுத்துவது அவசியம். அதற்கான பணியை அரசு தீவிரமாக செய்து வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து தமிழ்நாடு கட்டமைப்பு (லாஜிஸ்டிக்) கொள்கை 2023 குறித்து டிட்கோ (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம்) மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி விளக்கினாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு கொள்கை வகுத்துள்ளது. இதில், கட்டமைப்புகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறு துறைமுகங்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, சென்னையின் கட்டமைப்புத் திட்டம் குறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய உறுப்பினா் செயலா் ஐ.ஜெயக்குமாரும், நவீன கட்டமைப்பு மற்றும் சரக்கு கையாளுகை குறித்து இந்திய கண்டெய்னா் கழக (பகுதி 3) தலைவா் ஜி.காயத்திரியும் கலந்துரையாடினா்.
நிகழ்ச்சியில் சென்னை வா்த்தக மற்றும் தொழில் சபை தலைவா் ராம்குமாா் சங்கா், லாஜிஸ்டிக் குழுத் தலைவா் யு.உதயபாஸ்கா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.