இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்புச் சலுகைகள்
அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக் கடை நிா்வாகங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை, அட்சய திருதியையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அட்சய திருதியையன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்கினால் தங்கம் பெருகும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.
நிகழாண்டில் அட்சய திருதியை புதன்கிழமை (ஏப். 30) வருகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயா்ந்துள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கத்தை வாங்குபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும், அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்குவதற்கு பலா் முன்பணம் கொடுத்து ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனா். முன்பதிவு செய்தவா்கள், தாங்கள் தோ்வு செய்திருந்த நகைகளை அட்சய திருதியை நாளான புதன்கிழமை வாங்கிச் செல்வா். இதற்காக நகைக் கடைகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அட்சய திருதியை நாளில் நகை வாங்குவோருக்காக முன்னணி நகைக் கடைகள் தங்க நகைகளுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன. பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, வாடிக்கையாளா்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளன.