Pahalgam Attack: அட்டாரி - வாகா எல்லை மூடல் - இந்தியா, பாகிஸ்தான்; யாருக்கு என்ன...
பஹல்காம் விவகாரம்: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கையின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து ஒரு வாரமாக லாபத்துடன் வர்த்தகமாகின.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை, தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் வெளியேற உத்தரவு, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தூதரக ரீதியிலான இந்த அதிரடி நடவடிக்கைகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சரிவுடன் இன்று காலை முதல் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 79,982 புள்ளிகளாக வர்த்தகமானது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 51 புள்ளிகள் சரிந்து 24,278 ஆக விற்பனையாகி வருகின்றது.
13 முக்கிய துறைகளில் எட்டு துறைகளின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. உள்நாட்டில் கவனம் செலுத்தும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், நான்கு மாதங்களில் முதல்முறையாக 80,000 புள்ளிகளை கடந்து நேற்று வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.